Saturday 22 February 2014

திருப்பம் 1

திருப்பம் 1

திருப்பங்கள் பகுதி1

1. ஊருக்குள்ளே இருந்து ஒருவன் பாடுகிறான்

தெளிந்தவானில் தோன்றும் திங்கள்
தேயும் பின் முழுதாகும்
நெளிந்து ஓடும் நீரலை கடலில்
நெகிழ்ந்தும் பின்னெழும் ஓங்கும்
ஒளிந்து ஆழியில் விழுந்த கதிரும்
உதயம் காலையில் மின்னும்
பளிங்கு போல் எழில் பாடும் தமிழும்
பாரினில் மறுபடி எழுமோ

குளிர்ந்த காற்றும் குலவிடும் சமயம்
கொள்ளும் கோபப் புயலாம்
வெளிர்ந்தமேகம் விண்ணிடைஓடும்
வேண்டின் இடியொடு மின்னும்
ஒளிர்ந்த வாழ்வை ஒழித்திட வந்தான்
உரமும் கொண்டோம் எழுந்தோம்
தளர்ந்து ஒடச் செய்தோம் பகையைச்
தரணி வெகுண்டது ஏனோ

கருத்த இரவும் நிலையென் றில்லைக்
காணும்விடியல் ஒளியும்
பருத்த இடியும் பெருமழைகூடப்
பணியும் மறுபடி வீசும்
குருத்துமேனி குழந்தைகள் அன்னை
கொன்றவன் மட்டும் முற்றாய்
ஒருத்தனில்லாத் தமிழினம் கொல்ல
உலகம் பொறுத்திடலாமோ

வெளுத்த முகமும் விழிநீர்சிந்த
விடியலைத்தேடி அலைந்தோம்
கழுத்து வெட்டிக் குழிகளை மூட
கதறித் தேகம் துடித்தோம்
பழுத்த கனியா பச்சைக் காயா
பட்டிதழ் பூவா இலையா
விழுத்தி வெறியர் வெட்டியழிக்க
வியந்து கிடந்த உலகம்

அழுதோம் எத்தனை ஆயிரம் ஆயிரம்
ஐயோ துடி துடித்தோமே
தொழுதும் உயிரைக் காத்திடக் கேட்டே
தெருவெங்கும் அலைந்தோமே
எழுதும் விதிகளைக் கொள்ளும் உலகம்
எம்மினம் கொல்லக்கண்டும்
தழுவிக் காக்கும் எண்ணமும் கொள்ளாத்
தவறியதேன் தாய்நாடே!

2. ஊரின் புறத்தே!

ஓங்கிய கோபுரம் உச்சிப் பொன்முடி
உதயத் தொளிவெள்ளம்
தாங்கியே மின்னும் தகதக ஒளியின்
தன்மையை விழிநோக்கி
ஏங்கிய மனதோ டிளவய துடையோன்
இறையவள் தனை வேண்ணி
தேங்கிய துயரும் திரையிடும் விழியில்
துளியொடு நுழைகின்றான்

வீரத்தின் தாயே வெற்றியின் அன்னை
விழிகளைத் திறவாயோ
ஈரமுன் மனதுள் இருப்பதை அறிவேன்
எமைக்காத் தருளாயோ
வேரறுத் தெம்மை வீழ்த்திட வருவோர்
விதியெனக் கருதாமல்
ஊருடன் ஒன்றி ஒரணி சேர்ந்தே
உயர்வுற வழிகாண்போம்

நாம்வழி தவறி நடந்திடும் பாதை
நாற்திசை பிரியாமல்
தீம்புகழ் தமிழின் திருமகன் நொந்து
தெருவினில் அழியாது
வேம்பதன் சுவையாய் வெறுப்பினிலான
வீணர்களால் பிணமாய்
பூம்புனல் வாழும் மீனது வலையில்
பிடிபடும் வாழ்வேனோ

கூப்பிய கரங்கள் குவிந்தன மனதுள்
கொடிதோன் றெழில்மலராய்
நாப்பிழை யாது நற்றமிழ் பாடி
நினதடி பூசித்தேன்
ஆப்பினை இழுத்தே வாலினைபோடும்
அதிமதி ஊறுகளை!
தோப்பெனக் கூடத் துளிமழை கடலாய்
தோன்றவும் அருள்வாயோ
(தொடரும்)

திருப்பம் பகுதி 2

திருப்பம் பகுதி 2

3, உலகில் ஒரு உயரகட்டிடம் (ரகசிய அறை)

வட்டமிட்டோர் ஓரு மேசையை சுற்றியும்
வந்திருந்தோர் பலவண்ணம் - அதில்
கட்டியுமாள்திடக் கண்களில் தீ பற்றிக்
காணுதே ஏனிந்தக் கோபம் - இதை
விட்டுவிட்டால் என்ன வாகிடும் என்றவர்
விந்தை கலங்கிய போதும் - எங்கள்
கட்டமைப்பில் கைகள் விட்டு நழுவிடக்
காணுமுலகென்ற தாபம்

எத்தனையோ முறை எண்ணில் பிசகற்ற
எங்களின் ஆற்றல்கள் தானும் - இனி
புத்தியினால் பலவெற்றிகள் ஈட்டிடப்
போய்விடு மெங்களின் பேரும்
சத்தியமும் காத்து சாமிகளாய்ப் பெரும்
சித்திவிளைத்திடுங் காலம் - இங்கு
நித்திரை கொண்டிடில் நேருவது மெங்கள்
நெற்றியில் இட்டவர் நாமம்
***

வெட்டி ஒழிக்கட்டும் பூங்கொடிகளங்கு
வேரைஅறுத்திடவேண்டும் - அதில்
தொட்டவுடன் மனம் தீயெரிந் தாகட்டும்
தூவித்தான் கொட்டிட நஞ்சும் - அவர்
பட்டு ஒழியட்டும் பால்மரம் தானென்ன
பிஞ்சு கனி இலையாவும் - இனி
விட்டதில்லை அவர் ஈழம் எரியட்டும்
பொத்திடுங்கள் விழியாவும்


துட்டரும் தீயரும் பொங்கிஎழுந்தனர்
தேசமொன்றின் எல்லைமீது - அங்கு
கெட்டது நீதியும் காக்கும் அறமதும்
காகிதமேல் எழுத்தாக - பலம்
கட்டினை மீறித் தலையெழுதென்றிட
காட்சிகள் மாறும் திருப்பம் -அங்கு
தொட்டவர் கையிடை மைபடவேஇல்லை
தோன்றியதோ கருங்கோலம்
***

தேவர்கடைந்த அமுதினிலே யன்று
தோன்றிய நஞ்சினைப் போலே - இன்று
யாவரும் கொண்ட மனங்கள் கடைந்திட
ஆகிய நஞ்சென்னும் தோற்றம்- அதில்
ஏவல் விளைத்திட என்ன நடக்கினும்
ஏதுமோர் பேச்சறியாது - எவர்
தூவினும் நஞ்சினை தோல்வி முடிவென
தோற்றம் இருந்திடத் திட்டம்


***********

4. தேசத்தில் ஒருபக்கம்

கட்டுமரம் ஏறியதில் சுற்றி ஓடுவோம் = வீசும்
காற்றினிலே பாய்விரித்துக் கப்பல் ஓட்டுவோம்
எட்டியுயர்ந் தோங்கும் அலைமீது ஏறுவோம் - அது
ஏறிவிழும்போது விண்ணில் மாறித்தாவு வோம்
சுட்டவெயில் போனபின்னே தூர ஓடிடும் - முகில்
செந்தமிழ்க் குலத்தின்வீரம் தூய்மை எண்ணியே
சட்டெனத்தன் மெய்சிவந்து சஞ்சலத்துடன் - மேற்கு
சேர்ந்த வானத்தோடு சென்று சாய்ந்துகொள்ளினும்

கட்டிபோட்டு தீமைசெய்யும் காதகர்களின் - எண்ணம்
காற்றிலேபதர் பறக்கும் வண்ணமாக்குவோம்
சுட்டதும்நல் பொன்சிவக்கும் எங்கள்பாதையில் - உண்மை
சுட்டதாயின் கைகள் கூடிக்காணும் மெய்மையும்
எட்டநீர் குதித்துஓட எங்கள் தாகமும் - அது
இங்கு வாருமென்னும் எண்ணம் விட்டுஏகுவோம்
தொட்ட நீரும்மொண்டு வாயில் தாகம்நீக்கினும் - உள்ள
மட்டும்காண் சுதந்திரதை மேனி கோள்ளுவோம்

(தொடரும்)

திருப்பம் பகுதி3

திருப்பம் பகுதி3


5. குறிஞ்சி நிலம்

ஓங்குமலை வீசும் தென்றல் என்ன கூறுது - அது
ஓடிவந்து உந்தன்காதில் என்ன சொன்னது
ஏங்கும் வாழ்வில் என்றும்கொள் சுதந்திரத்தினை - இன்று
ஏன்மறந்து காண்பதென்று என்னைக் கேட்குது
தேங்கிவீழ்ந்து ஓடும்பாறை தொட்டுசிந்திடும் - அந்த
தூயநீர்கொள் அருவியோடி என்ன சொல்லுது
நீங்கியுன்நி லம்மறந்த வாழ்வைச் சாடுது - இங்கு
நீயில்லாமல் தேசமா என்றென்னை வையுது

பூங்கொடிக்குள் கொத்துகொத் தென்றான தேன்மலர் - தானும்
புன்னகைப்பில் உன்னைப் பார்த்து என்னசொன்னது
தாங்கிநீ மனம் பொறுத்த தன்மை ஏனது - உன்றன்
தாயெனும் நல்தேசம் மீட்கதேடு என்குது
மாங்கனிந்த சோலை யெங்கும் ஆடும் இன்பழம் - அது
மாறிஉள்ளம் தேய்ததேனே என்றுகேட்குது
மூங்கில் கூட்டம் மோதிதீ பிடித்த போதிலும் - உன்றன்
மூச்சுக்காற்றில் வெம்மையில்லை என்று நோகுது

செங்கனலென் றந்திவானம் மாறியதேனோ - அங்கு
சீறி நெஞ்சம் கோபமிட்ட மேகமும் ஏனோ
கங்கைவெள்ளம் போலமண்ணில் காணுது செந்நீர் - இதைக்
கண்டும் தூக்கம் கொள்வையோ என்றென்னைப் பேசுது
அங்கமெங்கும் அழகுமின்ன ஆடுது தோகை - அது
அங்கிருப்ப துச்சிமலைக் கந்தனின் கோவில்
தங்கவண்ணத் தோகை வேலன் தன்னைக் கேட்குது வேலும்
துன்பம் நீக்கிக் காக்கும் வீரம்கொள்ளத் தூண்டுது

பொங்கியோடும் பொய்கையூடு பொன்னிழில் மின்ன இந்தப்
போதினிலே நான் இருப்பேன் பொற்றமிழ்மன்றம்
சங்குமூதும் சத்தமொன்று கேட்பதுமென்ன - உந்தன்
சங்கநூலைப் போட்டுவிட்டு சென்றிடு கூட
தொங்கியாடும் ஊஞ்சல் வாழ்வை வென்றிடுநாளை - நல்ல
தூய நோக்கம் மின்னும்வண்ணம் தீயெழக் காளை
நங்கையோடு அன்னை நாட்டின் சின்னவர் குழந்தை - இவர்
நாளும் இன்ப வாழ்வுகாண வென்றிடு தேசம்

**************************

6. சதி அரங்கேற்றம்

வெட்டி முழக்கிய மேகம் மின்னலில்
கொட்டித் தூறுது மழை - அவை
தொட்டுக் கூரையின் மீது விழுந்திட
டக்டக் டக்கென இசை
கட்டிக் காத்தவை கள்வர் நுழைந்திடக்
கடும்புய லோ கடல் அலை - அது
முட்டத் திரள்வது போலப் புகுந்திட
முற்றிலும் அள்ளுது நிலை

திட்டமிட் டாற்றிடத் தோன்றிடு பகையும்
திசைகள் மூன்றிலும் கடல் - அவை
வட்ட மென்றாகியும் வந்து நுழைந்திடில்
வாழ்விற் குளதோ இடம்
விட்டுப்போவது உலகென் றாயினும்
வந்தே பிறந்திட்ட நிலம் -அட
கெட்டுப் போகினும் கும்பிட்டாவது
கீழ்மையில் வாழ்ந்திடும் குணம்

நெஞ்சுள் மூச்சினை கண்டே வாழ்வென
நின்றவரோ பயிர், களை - புவி
மஞ்சம் மாலைகள் மலரில் சயனமும்
மயங்கச் செய்திவர்களை
வஞ்சப் பாதையில் வழியும் காட்டிட
வென்றது உலகின் வலை - இனி
அஞ்சிக் கிடந்தவர் செல்திசை மாற்றித்
திருப்பம் நிகழுமோ விடை??

(தொடரும்)

திருப்பம் பகுதி 4

திருப்பம் பகுதி 4

7. ஊரின் மத்தியில்:


மாவிலைத் தோரணம் மங்கல இன்னிசை
மன்னவன் மாளிகைமுன் - பல
பூநறு வாசமும் புன்னகை யும்கொள
பூரிப்பில் நின்றவர்கள் - சில
ஏவல்கள் வேலைகள் இன்பநல் நாட்டியம்
இத்தனைக் கும்நடுவே - பல
நாவது செந்தமிழ் மீது பகைகொண்டு
நீசமுரைத்திடக் காண்

வென்றோம் அவர்நிலம் என்றோர் உரமிட
வீதியில் கூத்திடுவோர் -இதோ
கொன்றோம் அவரெனக் கூத்திடுவோர் கரம்
கொட்டி சிரித்தனர்காண் - நற்
சான்றோர் கூடும் சபை சட்டதுறைகளும்
சோர்ந்தே வெறுமைகொள்ள - அந்தத்
தேன்தமிழ் பேசிடும் நாட்டினை வென்றவர்
தீமை இழைத்துநின்றார்

வாசலி டைசில வண்ணப்ப தாகைகள்
வாஎன் றழைத்திருக்க - சொந்த
பேசுந்தமிழ் அதிலில்லைப் பிறன்மொழி
பூசிக் கிடந்தன காண் - இவர்
நேசமு டைத்தவ ரல்லர் பகைவரும்
நீதியற்றோர் அரசின் முடி
ஆளும் வகையினில் ஆடிடும் பொம்மையில்
ஆட்சி அமைத்துவிட்டார்

தீங்கிளைக்கும் பகை யோடு நலன்பெற
தோள் கொடுத்தே சிலரும் - கூடி
ஆங்கிருந் தார்அவர் ஆனந்த போதையின்
ஆழமும் காணநின்றார் - இனி
பூங்குயில் கானமும் புத்தொளி வண்ணம்
போதை கொள் மஞ்சமதில் இவர்
தூங்கியெழச் சுக தோரணம், மாலைகள்
தூவிக்கிடந்தன காண்
***************

8. சில மைல்களுக்கப்பால்

உருள் பெரு ஊர்திகள் உளமது கிலிபட
ஊரினுள் நுழைவதையும் அத்
தெருமுழு பேரணி தமிழல்ல யாரெனத்
தவித்தனர் தமிழ்க்குலமும் - இதில்
ஒரு பெரு அழிவென உணர்வுகள் உறுத்திட
உயிர்ப்பய உணர்வெழவே -நல்
பரிவினை விரும்பியும் பலதலைவரின் விழி
பதிவொளி தனை இயக்க

விதி எனும் கருமுகம் கொடுமைகள் விளைத்திட
வழிந்தன வியர்வையல்ல - நல்ல
சதிபதியுடன் தவழ் குழந்தைகள் குரலற
செறிந்தன பிணமலைகள் - ஒரு
கதியின்றி நிசப்தமும் கனவுகள் எனவிழி
கணமதில் ஒளிவிலக - இந்த
மதியுல கதைப் பெரு மதியொடு வலமிடும்
பதிகரு வியில் கண்டார்

(புத்தியுள்ள உலகினர் சந்திரனோடு சேர்ந்து உலகைச் சுற்றும் சற்றலைட் கண்களூடாக கண்டு களித்தனர்
)*****************

10. ...மன்னர் மாளிகையில்....

மாங்கனிச் சாற்றினில் தேன்கலந்தோர் மது
ஊற்றும் இதழுடையாள் - எழிற்
பூங்குழல் தான்விரித் தோங்கிடும் புன்னகை
பூத்தவள் மன்னவனின் - அயல்
மூங்கிலின் பொன்னெழில் மேவுகரத்துடன்
மெல்லென ஊட்டிவைக்க - கரம்
தாங்கிஒரு பெண்ணும் சாமரை வீசிடும்
தன்மையைப் பேணிநின்றாள்

ஆனந்த போதையில் வானில் மிதந்தவன்
ஆகாவென விழிகள் - இன்ப
தேனது மாந்தத் திளைத்தவனோ மனம்
தூங்கிக் களித்திருக்க - அயல்
வானது போற்றிடும் மானத்தமிழ்மகன்
வந்துகை கட்டி நின்றான் - என்ன
ஆனது வீரமோ தொன்மைக்கலி புறம்
தானெடு மார்புடையோன்

கூனலில் நெஞ்சுங் குறுகி வளைந்திடக்
காலடி நின்றவன்காண் - தமிழ்
மானமும் விட்டவன் மஞ்சத்தில்; தூங்கிட
மாறிக் கிடந்தவனும் -அந்த
ஆனந்த வேளையில் கூச்சலும் சத்தமும்
அண்மை எழுந்துவர - என்ன
ஆனது எண்ணிட முன்னர் விரைந்தொரு
ஆபத்தென உணர்ந்தான்

கொல் லுடன்கொல் எனக். கூவித்துடித்தனர்
கொன்று இனமழிப்போர் அட
நில்லென உள்ளமும் சொல்லிடும்போதிலும்
நிர்க்கதி என்றுணர்ந்தான் - இவர்
வெல்லென வீணரை வேண்டிஉதவிய
வெற்று மதியூகத்தை என்றும்,
கொல்லுமினம் தன்னைக் கொள்கை சிதைவுறக்
கொல்வரோ எண்ணிநொந்தான்

(தொடரும்)

திருப்பம் பகுதி 5

திருப்பம் பகுதி 5


11. தேசத்தின் ஒரு புறம்

பூங்கணை எய்தவன் புண்படுமேனியை
போதையிடும் ஒருத்தி - இரு
தேங்கிய கண்களில் தித்திக்குதோ எனும்
தேவை பார்த்திருக்க - அவள்
தாங்கிய கைகளில் தாமரைபூ இதம்
தன்னை உணர்ந்தவனாய் - அங்கு
ஆங்கவள் மேனியில் அத்தனைஇன்பமென்
றன்பில் திளைத்தவனை

ஆனந்த போதையில் வானில் மிதந்தவன்
ஆற்றலில் தூரநின்றே - இனி
தேனது மாந்திய வேளையில் திடுமென
தடதடவெனும் சத்தம் - அட
ஏனது கூச்சலும் இத்தனை சத்தமும்
என்றயல் கேட்டெழவும் - ஆ..
போனதுன் உயிருடன் புறப்படு காத்திட
பின்னிருந் தொலி கேட்டான்

மன்னவனே தமிழ் சொல்லுவதால் உமை
மரணத் தேவியவள் - இனி
தன்னுடைகரமதில் தாங்கிட வருகிறாள்
தருமம் காக்குமெனில் - ஒரு
மின்னும் கணந்தன்னில் விட்டுபறந்திடு
மேனியும் வேண்டுமெனில் - உடன்
என்றவன் இயம்பிட இருக்கைவிட்டுமே
எழுந்தான் வழி நடந்தான்

கொல் உடன்கொல் என்று கூறித்துடித்தனர்
கொன்றே இனமழிப்போர்- பொய்
நில்லென உள்ளமும் சொல்லிடு ம்போதிலும்
நிர்க்கதி என்றுணர்ந்தான் -இவர்
வெல்லென வீணரை வேண்டின உதவிய
வெற்று மதித்திறமும் - போய்ச்
சில்லெனும் உணர்வுகள் சீரளித்தேன் எனும்
சிறுமை யுணர்ந் தகன்றான்

கேட்டு ஒலிதிட்ட கூச்சலுக்கிடையினில்
கிழக்கொரு மண்டபத்தில் - எழிற்
பாட்டுமிசைத் தொலி கூட்ட மலர்க்கொடி
போலொரு கோதை நடம்- தனும்
ஆட்டமும் கொண்டிட ஆனந்தம் மேலிட
ஆகும் நிலைமை தனை இந்த
நாட்டைப் பிடித்திட்ட நஞ்சவ ரோடுடன்
நின்றவன் கண்டு கொண்டான்

தீட்டிய வேல்விழி திங்களெனும் முகத்
தேவதை ஆடிநிற்க - அவள்
பூட்டிய கொல்லெனும் பூமலர்பாதப் -
புறத்திரு பொற்சதங்கை -உடன்
காட்டிய தோஒலி கொல் என்றொலித்திடக்
கேட்டவன் தன்நிலையை
சாட்டியதாய் பழிகொண்டு நகைப்பினைச்
சார்ந்தது போலிருக்க

கூட்டியதாரென கோபங்கொண்டு ஆ..
கோதை நிறுத்துமென்றான்
தீட்டிய பொன்விழி திக்கில் திரும்பிடத்
தேவதை போலெழிலாள்
காட்டிய ஏளனம் கண்களில் மின்னிட
கன்னம் சிவந்தவளோ
ஆட்டம் நிறுத்திடும் எண்ணமில்லை அவள்
அவள் ஆடிக்கொண்டே யிருந்தாள்

வாட்டிய துன்பமும் அஞ்சும் மனத்துடன்
வந்த இடர்நிலையும்
கேட்டகொலை யெனும் கூச்சலும்சத்தமும்
கனவோ முறையறிய
ஈட்டி பிடித்தொரு சேவகன் நின்றிட
யாரங்கே என்றழைத்தான்
காட்டிவிரல் கொண்டு ஏவிய மன்னனை
காணா தவன் நடந்தான்

நாட்டிடை குறுநிலம் ஆளுவன் என்றொரு
நாமம் எனக்கெதற்கு
வீட்டினில் ஆடவன் கொள்ளும் மதிப்பதும்
வீழ்ச்சி யென்றே யிருக்க
தேட்டமும் செல்வமும் தந்தவர் நெஞ்சினில்
தீமை விஷம் இருக்கும்
காட்டிய அன்பிலும் கையணைக்கும் விதம்
காரணம் வேறிருக்கும்

வெட்ட வளர்த்திடும் ஆட்டின்நிலையென
வீரமும் விட்டுலைந்து
குட்டவும் குனிந்திடும் குவலய வாழ்வதில்
கொண்ட மகிழ்வுமென்ன
விட்டபிழைகளை முற்றும் திருத்திட
வேளை பிறந்திடுமோ
திட்டமிட்டே திசை மாற்றி நடந்தனன்
தேவை திருப்பமொன்றோ

போகட்டும் என்றுள முள்ளே குமுறிய
போதிலும் நொந்து மனம்
தீகொட்டும் வேதனை செல்லாக் காசென
சில்லறை யாக்கியதேன்
போர் கொட்டும்மேளமும் பொல்லாப்பகைதனை
பொற்றமிழ் மோதிநிற்க
வாய்கட்டி மௌனமும் வார்த்தை கெட்டேமனம்
வாழ்ந்திடும் தேவையென்ன

(தொடரும்)

திருப்பம் பகுதி 6

திருப்பம் பகுதி 6

12. கொடுங்கோரம்

அன்னை அழுதாள் பிள்ளை அழுதான் 
அன்புக் குலமாந்தர்:
மின்னும் இடிகள் கொல்லும் வெடிகள்
முன்னாற் கண்டழுதார்
மன்னன் ஆணை கொல்என்றார்கள்
மரணப்பசி கொண்டே
இன்னுமின்னும் மின்னும்வேகம்
எத்தனை ஆயிரங்கள்

கெஞ்சும் குரல்கள் அஞ்சும்கண்கள்
ஆகா போதை கண்டார்
வஞ்சம் கோபம் வழியும் குருதி
வானப் பிரவேசம்
அஞ்சும் கதறல் ஆறாத்துயரம்
அவலத்தின் எல்லை
மிஞ்சும் வெறிகள் மிரட்டும் சத்தம்
மின்னும் கைவாள்கள்

பிஞ்சுகுழந்தை பேசத்தெரியா
பிதுங்கும் விழிப்பார்வை
பஞ்சுகைகள் பாவமில்லை
பிறந்தோர் பழிதோஷம்
நெஞ்சம் கதறித் துடித்தாலென்ன
நிலமோ அவர் சொந்தம்
நஞ்சு தூவல் நடுங்குமுள்ளம்
நரகத் தலைமை இதோ

பயணம்
போகும்பாதை சொன்னான் அந்தோ
புரவியின் முதுகேறி
ஏகும் வழியைப் புரியாமல்இவ்
இடரில் தவிக்கின்றான்-
வேகங் கொண்டேஓடும்குதிரை
விரையும் வழிமீது
ஆகும் எதனால் அஞ்சித்தானும்
அடங்கா தோடியது

வெள்ளை மீன்கள் வானக்குளத்திலே
விந்தை கண்சிமிட்ட
கொள்ளிப் பேயாய் குட்டைவெளியில்
குறுந்தீ நின்றாட
நள்ளிர வாகும் போதில் எங்கே
நானும் என்றவனை
துள்ளிச்சென்ற குதிரை நிற்க
தூங்கும் விழிநோக்க

செத்தோர்ப் பாதி சாகும்பிணங்கள்
சரிந்தே வீழ்ந்திருக்க
கத்தும் அலறல் கைதுண்டாகி
காற்றில் மணம் வீச
அத்தனைகோரம் அன்னைமண்ணில்
யாரால் இது வெல்லாம்
சத்தம்போட்டு கத்திக்கொண்டான்
என்னால் என்னாலே

அழுதான் மனதில்ஆயிரம் கோடி
அகந்தை வெடித்தோட
பழுதாய்போற்றும் பாவம் தீயில்
பஞ்சாய் பொறிகொள்ள
எழுவாய் உந்தன் உள்ளக் கயமை
உடைபட விதிமாற
தொழுதான் அறமொடு திருந்திய உள்ளத்
திடையோர் திசைமாற

திருப்பம்

பொங்கும் கடல்தனும் பொங்குவதேனென் இவர்
பொங்காநிலைகண்டோ
செங்கதிர் தானும் சிவந்ததுமேன் இச்
சினத்தின் வழிகண்டோ
கங்குல் விடிந்தொளி கொண்டது காலை
கதிரவன் பகைவெல்ல
எங்கும் இருள் கரைந்தோடின இரவின்
கொடுமைப் பிடிவிலக

தொங்கிவிழும் அப்புரவியின் முதுகிடை
துள்ளித் தொற்றியதும்
தெங்குபனவளர் தீந் தமிழ் நாட்டின்
தெருவில் விரைவாக
எங்கும் இலங்கிடு தெய்வபுகழ்திரு
இறையவள் இடம்நோக்கி
பொங்கும்சுடரொளி புலர்ந்திடும்வேளை
போய்வழி அடைகின்றான்

(தொடரும்)

திருப்பம் 7 வது பகுதி (முடிந்தது)

திருப்பம் 7 வது பகுதி (முடிந்தது)
12. திருப்பம்

நொங்கு வளர் பெரு நெடிதெனும் பனைகள்
நெருநெரு என்றொலிக்க
தொங்கும் பனையிடை காய்ந்திடும் ஓலை
தென்றல் தொடக்கூசி
அங்கிங் கெனவும் ஆடிடும் ஓசையும்
அரண்மனை கொடிமுகமாய்
எங்கு மெழுந்திடும் ஒசையைக் கேட்டதும்
அரண்டிடும் புரவி நிற்க


ஓங்கிய கோபுரம், உச்சியிற்பொன்முடி
உதயக் கிரகணங்கள்
தாங்கியே தகதக எனுமெழில் மின்னிய
தனையே நோக்கியதாய்
ஏங்கிய மனதுடன் இளவய துடையவன்
இறையவள்தனை வேண்ட
தேங்கிடும் பயமெழ திரையிடும் விழிநீர்
தொட்டிட உட்சென்றான்

செந்நிறத் தீயாய் திக்கிலெழுமத்
திருமகள் சிலைமுன்னே
சுந்தர நிலவின் ஒளி பெறு வானில்
சாமரைமுகில் வீச
தந்திடும் மளவில் தன்முகவண்ண,
தண்முகம் அழகென்றே
சிந்திடுமா பய செம்மையில் வானடி
செவ்வரி வடிவாக

வீரத்தாயவள் முன்னே வந்தோன்
வீழ்ந்தே கிடக்கின்றான்
நீரைப்பிரிந்த ஆம்பல் போலே
நீளக் கிடந்தோனை
ஓரக் கண்ணால் வீரத்தாயும்
விழி கொண்டே கண்டு
யாரப்பாநீ கேளாயென்றே
கூறும் மொழிகேட்டான்

வெள்ளி முளைக்கும் முன்னே நீயும்
வீரம் பெறவேண்டும்
அள்ளி யெடுத்தே ஆற்றல்கொண்டும்
அதிரும் நடைவேண்டும்
தெள்ளென அறிவும் திடமும்பார்வை
தீயென ஒளிவீசி
கொள்ளையர்பூமி கொடுமைகள் நீங்க
குமுறும் மனம் வேண்டும்

தீயன கண்டே தேசப்புதல்வர்
தேர்ந்தோர் வழிநோக்கி
தூயன எணணித் தோள்களில் பாரம்
தூக்கும் நிலைவேண்டும்
தாயெனப் போற்றி தாய்மண் காக்கும்
தன்மை பெறவேண்டும்
தேய்ந்துவிடாது திசையை மாற்றும்
திருப்பங்கள் வேண்டும்


(முற்றும்)+