Saturday, 22 February 2014

திருப்பம் பகுதி 2

திருப்பம் பகுதி 2

3, உலகில் ஒரு உயரகட்டிடம் (ரகசிய அறை)

வட்டமிட்டோர் ஓரு மேசையை சுற்றியும்
வந்திருந்தோர் பலவண்ணம் - அதில்
கட்டியுமாள்திடக் கண்களில் தீ பற்றிக்
காணுதே ஏனிந்தக் கோபம் - இதை
விட்டுவிட்டால் என்ன வாகிடும் என்றவர்
விந்தை கலங்கிய போதும் - எங்கள்
கட்டமைப்பில் கைகள் விட்டு நழுவிடக்
காணுமுலகென்ற தாபம்

எத்தனையோ முறை எண்ணில் பிசகற்ற
எங்களின் ஆற்றல்கள் தானும் - இனி
புத்தியினால் பலவெற்றிகள் ஈட்டிடப்
போய்விடு மெங்களின் பேரும்
சத்தியமும் காத்து சாமிகளாய்ப் பெரும்
சித்திவிளைத்திடுங் காலம் - இங்கு
நித்திரை கொண்டிடில் நேருவது மெங்கள்
நெற்றியில் இட்டவர் நாமம்
***

வெட்டி ஒழிக்கட்டும் பூங்கொடிகளங்கு
வேரைஅறுத்திடவேண்டும் - அதில்
தொட்டவுடன் மனம் தீயெரிந் தாகட்டும்
தூவித்தான் கொட்டிட நஞ்சும் - அவர்
பட்டு ஒழியட்டும் பால்மரம் தானென்ன
பிஞ்சு கனி இலையாவும் - இனி
விட்டதில்லை அவர் ஈழம் எரியட்டும்
பொத்திடுங்கள் விழியாவும்


துட்டரும் தீயரும் பொங்கிஎழுந்தனர்
தேசமொன்றின் எல்லைமீது - அங்கு
கெட்டது நீதியும் காக்கும் அறமதும்
காகிதமேல் எழுத்தாக - பலம்
கட்டினை மீறித் தலையெழுதென்றிட
காட்சிகள் மாறும் திருப்பம் -அங்கு
தொட்டவர் கையிடை மைபடவேஇல்லை
தோன்றியதோ கருங்கோலம்
***

தேவர்கடைந்த அமுதினிலே யன்று
தோன்றிய நஞ்சினைப் போலே - இன்று
யாவரும் கொண்ட மனங்கள் கடைந்திட
ஆகிய நஞ்சென்னும் தோற்றம்- அதில்
ஏவல் விளைத்திட என்ன நடக்கினும்
ஏதுமோர் பேச்சறியாது - எவர்
தூவினும் நஞ்சினை தோல்வி முடிவென
தோற்றம் இருந்திடத் திட்டம்


***********

4. தேசத்தில் ஒருபக்கம்

கட்டுமரம் ஏறியதில் சுற்றி ஓடுவோம் = வீசும்
காற்றினிலே பாய்விரித்துக் கப்பல் ஓட்டுவோம்
எட்டியுயர்ந் தோங்கும் அலைமீது ஏறுவோம் - அது
ஏறிவிழும்போது விண்ணில் மாறித்தாவு வோம்
சுட்டவெயில் போனபின்னே தூர ஓடிடும் - முகில்
செந்தமிழ்க் குலத்தின்வீரம் தூய்மை எண்ணியே
சட்டெனத்தன் மெய்சிவந்து சஞ்சலத்துடன் - மேற்கு
சேர்ந்த வானத்தோடு சென்று சாய்ந்துகொள்ளினும்

கட்டிபோட்டு தீமைசெய்யும் காதகர்களின் - எண்ணம்
காற்றிலேபதர் பறக்கும் வண்ணமாக்குவோம்
சுட்டதும்நல் பொன்சிவக்கும் எங்கள்பாதையில் - உண்மை
சுட்டதாயின் கைகள் கூடிக்காணும் மெய்மையும்
எட்டநீர் குதித்துஓட எங்கள் தாகமும் - அது
இங்கு வாருமென்னும் எண்ணம் விட்டுஏகுவோம்
தொட்ட நீரும்மொண்டு வாயில் தாகம்நீக்கினும் - உள்ள
மட்டும்காண் சுதந்திரதை மேனி கோள்ளுவோம்

(தொடரும்)

No comments:

Post a Comment