Thursday, 25 April 2013

காதல் இன்றேல்:: பகுதி1 (பெண் கிளியின் கதை)



1. தீராத துயரம்


நீண்டேவிரிந்த தோர்  நெடுங்காட்டி னோரத்தே
மாண்டோர் உடல் தீய்க்கும் மயானக் காடொன்று
மூண்டே எரியும் தீ முன்னெழுந்து காட்சிதர
மீண்டும் முளைகொள்ளா மேதினியில் வாழ்விழந்த

பட்ட மரமொன்று  பாதிக் கிளை யிரண்டு
எட்ட எரி நெருப்பில் எழும் புகை வானோங்க
வெட்டி அழித்தமர விரிகிளையின் ஒரத்தே
பெட்டைக் கிளியொன்று பேச்சின்றித் தானமர்ந்து

கண்கள் நீர்வழியக் கருகும்தீ புகைபார்த்து
மண்ணிலென் வாழ்வேது  மரணத்தைக் காணுதலே
திண்ணமென் றெண்ணீத் தீயுள் உயிர்விடவும்
எண்ணப், பெருவானில் எங்கிருந்தோ வந்தகுயில்

பக்கக் கிளைதன்னில்  பறந்துவந் தமர்ந்ததுவாம்
துக்கம் உளம்மீறித் துடித்திட்ட கிளிகண்டு
செக்கசிவந்த வாய்ச் சிறுகிளியின் துயரென்ன
நெக்கநெகிழ் துருக்கும் நினைவுக் கொடுமைதனை

மெல்லவிழிகண்டு மௌனத்தில் எண்ணிற்று
பொல்லா தீங்கொன்று பட்டதுவோ பகலிடையே
நெல்லும் மணி உண்ணா நீசர் விரட்டினரோ
கல்லைக் கவணிட்டு  காதகரும் வீசினரோ

தொல்லைஎனச் சுற்றம் தூர விரட்டியதோ
நில்லாய் எனப்பருந்து நேர்வந்து கொத்தியதோ
அல்ல பலதெண்ணி அதிசயித்த வேளையிலே
சொல்லால் பேசுங்கிளி சோகமெனக் குமுறியது

(கிளி பேசுகிறது)

”வாச மெழும் பூப்போல் வாழ்ந்தேன் அழகுடனே
பேசி எனைமயக்கிப் பேதைமனம் கொண்டவர் யார்
ஆசைமுடிந்தவுடன் அன்புமனம் விட்டதென்ன?
தேசம்கடந்து கால் திசைகாணாச் சென்றதென்ன?

பூவை எறிந்தனைஏன்? புயலடித்து வீழ்ந்ததென
சாவை அணைத்துவிடச் சஞ்சலமும் கொண்டேனே
தேவை முடிந்தவுடன் தேடவைத்து சென்றதேன்
பாவை இவள்கொள்ளும் பாடுதுயர் அறியாயோ

பேதை உனைநம்பிப் பெண்மைதனை ஈந்தவளாம்
போதை முடிந்தவுடன் புறந்தள்ளிப் போனதென்ன?
பாதை மறந்தும் ஏன்? பார்க்க மனம் வாராதோ?
மாதைபிரிந்ததென்ன? மாற மனம் கூடலையோ?

பாவை யிவ ளெண்ணிப் பக்கம் அணைந்திலையேல்
நாவை அறுதெறிந்து நான்சாக மாட்டேனோ?
காவிஉடல் எடுத்துக் கட்டையிலே போட்டெவரும்
மேவத் தீ மூட்டாரோ? மின்னல்தான் வீழாதோ?

காதல் கனிந்ததென கற்பனையில் நானிருக்க
போதல் இனிதெனவே போனவரே எங்கு ள்ளீர்
மோதல் இருந்திடலாம் மோகம் கலைந்திடலாம்
சாதல் நிலையடைந்தேன்  சற்றுமனமிளகாதோ

பக்கமிருந்தழுது பாடுங்கிளிபார்த்துமன
துக்கமெடுத்தே, தன் தோல்விதனை எண்ணிக்குரல்
விக்கித்திணறிஒரு வேதனையில் தான்துடித்து
சிக்கித் திரிந்தகுரல் சொல்லுங்கிளி மொழிகேட்டே

திக்கற்ற பேடுதனை திரும்பிக் குயில் பார்த்து
”மிக்க துயரெடுத்து மேதினியில் வாழ்பவளே
எக்கதியு மில்லையென் றிளைத்து அழுபவளே
நிர்க்கதியின் காரணமென் நானறியக் கூறென்ன

அழுத நிலைநிறுத்தி அயலிருந்த குயில்நோக்கி
எழுதும் விதிதலையில்  எதை யெழுதிப்போனதுவோ
தொழுது விழுந்தழுதும் துயர் போகக்காணேனே
பொழுதிந்தவேளை நீ புரியக் கதைசொல்வேன்

காதல் இன்றேல்...பகுதி 2 (பெண்கிளியின் கதை)


2. துயரின் முடிவு

மாலை யிருள்மயக்கம் மாந்தர்வயல் தோட்டமதில்
வேலை முடித்தலைந்து வீடேகும் நேரத்தில்
தோலை எலும்பெடுத்துத் தோன்றும் சிலஎருதுகளும்
காலை எடுத்தபசி கண்டபுல் போதாமல்

நொண்டி நடந்தசைய, நோயெடுத்த முதியவரும்
வண்டியி ருந்தபடி வாய்திறந்து பெரிதிருமி
தொண்டை கனைத்தவொரு தோற்றங் கண்டேயக்
கெண்டைமீன் நீர்வெளியே கிடந்து துடித்ததென

வெண்ணை என உருகி வேதனையை கொட்டியதாய்,
கண்ணின் துளி உதிரக் காணுங்கிளி  கூறியது
”பெண்ணின் நலமறியாப் பித்தர்கள் வாழும்வரை
மண்ணில் கரைவதுவோ மாதர்விழி நீராகும்

அன்னை திருவயிற்றில் அழகுமணிக் கருவுயிர்த்து
பின்னர் உதிக்கையிலே பிறந்தவொரு அழுகையவர்
கன்னத் திருந் தொழிந்து காய்வதுதான் எப்போது?
சின்னக் குழந்தையெனில் சீராட்டிப் பாட்டிசைப்பர்

கன்னி வயதென்றால் கதைநூறு பேசிடுவார்
பின்னைவீட்டிலிவள் பேசியது பார்த்ததென்பர்
கன்னத்தொரு முத்தம் கண்டதெனப் பொய்யுரைப்பர்
சின்ன மனதெடுத்து சேதிபல கூறிடுவர்

உண்மைக் காதலுடன் ஒருவன்தனை நேசிப்பின்
பெண்மைச் சுகமறிந்து பேசாமல் போயிடுவான்
மண்ணில் எறிந்ததொரு மாதுளையின் முத்தெனவே
கண்ணீர் சுரப்பதன்றி காப்பதற்கு யாருமில்லை

எண்ணத் திருத்திமன துள்ளே குமுறியொரு
கிண்ணப்பசும்பாலில் கொட்டியதோர் துளிவிசமாய்
உண்ணவும் முடியா உமிழ்ந்திடவும் மாட்டாது
மண்ணில் கிடந்துழலும் மங்கையரில் ஒன்றானேன்

என்றிடப் பூங்குயிலோ இன்னலே இல்லாத
ஒன்றில்லை வாழ்வில் உரைதிட நீகேளாய்
தென்றல் புயலாகும் திரைகடலும் பொங்கிவரும்
கொன்றை மலர்தானும் கொழுந்துவிட்டுத் தீஎரியும்

பெண்ணே உலகமதில் பெருஞ்சக்தி கொண்டவளாம்
கண்ணீர்க் கிரையாகி காலமெலாம் துஞ்சுகிறாள்
எண்ணி வெகுண்டெழுந்தால் எரியும்,ஒருமதுரையென
கண்ணை விழிக்கவோர் காற்றும் புயலாய் மாறும்

மாவுலகு சுற்றும்விசை மேலெழுந்த சூரியனாம்
காவுமிந்த அண்டவெளி காற்றில்லா சூனியமும்
ஏவி ஒரு சக்தியதன் இழுவைக்கு ஆடுதெனில்
தூவிநிலம் வீழ்சக்தி தோற்றங்களே பெண்ணாவர்

பெண்ணில் மறைந்துள்ள பெரும்சக்தி தானெழவே
அண்டம்சிலுசிலுத்து ஆகாயம் ஒடியாதோ
விண்ணில் சுழலுபவை விசையெடுத்து ஓடாதோ
அன்னை சக்தியவள் அருங்குழந்தை நீவிர்காள்

என்றாலும் இன்னல்தனை இதயத் தடக்கியொரு
மென்மை கொழித்தவராய் மௌன உருவெடுத்து
புன்னகை கொண்டேநற் பொறுமைதனைக் காத்திடுவீர்
மண்ணில் பெருவாழ்வும் மகிமையும் பொங்கி வரும்

சொல்லிச் குயிலெழுந்து சிறகடித்து வான்பறக்க
மெல்லத் திரும்பிதன் மீளாத் துயரடக்கி
கல்லாய் மனதெடுத்து கண்ணைத் துடைத்தகிளி
இல்லத் திசைநோக்கி எழுந்து பறந்ததுவே !

(முடிந்தது)

நீதி கேட்ட தேவதை--- ( பகுதி 1)

੧.வந்ததோ வினை

கண்கள் சிவந்திட நெஞ்சம் கனந்திட
  காண்பது யார்இவளோ?
பெண்ணின் குணமிழிந் தென்னைக்  
  சினந்திடும்   பேதையின் பேரெதுவோ ?
வண்ண முகம்பெருந் தீயெழுந் தாடிட
  வந்தவள் யார்மகளோ?
எண்ண மெடுத்தவள் என்னநி னைத்தனள்
   எப்படிச் சொல்லுவளோ?

மின்ன லெனவந்து நின்றவளே யுந்தன்
   மென்முகம் வாடுவதேன்?
நன்னரும் மேனி நலங்கெடக் கோபமுன்
    நெஞ்சி லெழுந்ததுமேன்?
//பன்னுரும் சேனை படைகொண்டு வீரம்
     பகை வென்ற தால்மனதில்
என்னரும் வாழ்வு இழிந்திடச் செய்திடல்
     எண்ணுவ தாகிடுமோ//

அன்னவள் பேச்சில றிந்திட ஆ இவள்
   அந்தியில் தாமரைகள்
பன்னள வென்று செறிந்த பளிங்கென்னும்
   பொய்கையில் நீந்தியவள்
முன்ன ரெழுந்தவெஞ் சூரியன் மாலையில்
   மேற்கில் சினமெழுந்து
தன்னிலை கெட்டு தணல்கொதி கொண்டு
   கடல்  கண்டு வீழுகையில்

மென்தளிர் மேனியில் தொட்ட களிப்பினில்
   துள்ளிடும் நீரலைகள்
வந்து கரைதனில் மண்ணி லுருண்டு விரைந்து
   புரண்டுசெல்ல
விந்தை பொலிந்திட வானக் குளத்திலோர்
   வெண்மதி நீந்துவதாய்
இந்த மகளிள மான்குளிர்ப் பொய்கையில்
   இன்பநீராடக் கண்டேன்

கண்கள் மறந்துமே சிந்தை யிளந்தவள்
   காரிகை யின்எழிலில்
அண்ணள வாயொரு கண்ணிமை நேர
   மயர்ந்தது நிச்சயமே
எண்ணியொருந் தவறேது மிழைத்திலேன்
   என்னவென்றே பகர்வாய்
கண்ணியம் கொண்டு கணமிடம் நீங்கிய
   காட்சி தெரிந்திலையோ

”புன்னகை கொண்டுநின் பேச்சில் மயங்கிடப்
   பேதை யல்லயிவளோ
கன்னம் பிடித்திவள் கன்னியின் பொன்னிதழ்
   கைவிரல் தொட்டதுவும்
இன்னும் அடம்பிடித் தாவல் கொண்டேயிவள்
   ஆசையில் கொஞ்சியதும்
பொன்னில் வளர்ந்தவ ளென்று பசற்றிய
   பொய்யும் மறந்ததென்ன?

கன்னியிவள் உடல் கற்பில் மாசுஎழக்
   காரிய மானவரே
என்னவென் றேயொரு நீதிசொல் லச்சபை
   முன்னேயெ ழுந்தருளும்
பின்னையி ராப்பக லோடு கலந்திடும்
    போதில் அரசமர
திண்ணையடி வந்து சேரு”மெனச் சொல்லித்
   தென்றலென நடந்தாள்

பகுதி 2 தொடரும்

நீதி கேட்ட தேவதை------ (பகுதி 2 )

2. நீதியைத் தேடி

அன்னம் நடை அசைந்தாடுமிடை எழில்
    வண்ண மயிலெனவே -எந்தன்
எண்ணமது சிதைந்தோட அவள்நடை
    கண்டுமன மிழந்தேன் - செவ்
வண்ணங் குழைத்த நல்மாலைவரஅவள்
     வஞ்சியின் சொல்லினுக்கே - அவள்
திண்ண மெடுத்துமே செய்வதுமோச மென்
      றுண்மை பகரச்சென்றேன்

மஞ்சள் நிறவெயில் மாலை வீசும் காற்று
    மாந்தரின் பேச்சினொலி -  மெது
பஞ்சினில் தீயென வெந்த மனமாற
     பாலகர் கொஞ்சுமொலி -எந்தன்
நெஞ்சைக் கவர்ந்திடும் சங்கீததாளமும்
   நேரெதிர் கேட்டிருக்க - உள்ளே
சஞ்சலங் கொள்மனம் மெல்லகனிந்திடச்
    செய்தது மாலையெழில்

சின்னஇதழ் விரித்தின்ப மணமெடுத்
    தேங்கின பன்மலர்கள் - மது
தின்னவருங் கருவண்டை அசைந்தாடித்
   தேடின பூங்கொடிகள் - இனித்
தன்னவர் வந்திடுங் காலமென இல்ல
   நங்கையர் பூமுடித்து - அங்கு
சின்ன அகல்விளக் கேற்றி ஒளியிட்டு
    சித்திர மாகிநின்றார்

நெல்மணி தேடிய புள்ளினங்கள் வான்
    நீலத்தில் கோலமிட - பசும்
புல்லைக் கடித்தது போதுமென்று பசு
    போகும் வழி திரும்ப -  தமிழ்
கல்வி பயின்றிடத் திண்ணை அயல்சிறு
    கன்னியர் கூடியதும் -   சிலர்
சல்சல வென்று சலங்கை குலுங்கிட
     செந்தமிழ்க் காடியதும்


கண்டுமனதினில் கொண்ட உவகைகள்
     கொஞ்சமல்ல நடந்தேன் - அந்த
கொண்டையில் பூவிடும் நங்கைதனை அயல்
     கண்டு அருகணைந்தேன் - குறு
வண்டையுரித்தன இரண்டுகண்கள் என்னை
      கண்டு மருண்டிருக்க - மலர்
செண்டை யுருவொத்த சின்ன இதழென்னும்
       தீயி நிறம் எடுத்தாள்

வந்திட மாட்டீரென் றெண்ண முதலிங்கு
      .வந்தீர் அதிசயம்தான் - உங்கள்
சிந்தையி லென்னையும் கொண்டதனாலேயே
      இந்த நிலையும் கொண்டீர் - ஆகா
இந்தளவே எந்தன் எண்ணம் நிறைந்தவர்
      என்றுமே வாழும்வழி - அது
உந்தன் மனம் கொண்ட அன்பிலெழுவது
      ஆத்திரம் வேண்டமென்றாள்

பித்துப்பிடித்தவள் போலப்பிதற்றிடும்
     பெண்ணே பெரியோர் எங்கே - இதோ
சித்தம்பிழைத்தவள் உன்னை நம்பியிங்கே
     சேர்ந்தேன் மடமையிலே - ஒரு
எத்தன் செய்யும்வேலை இட்டவளே இனி
       என்னை மறந்துவிடு - இனி
இத்துடன் யாவும் நிறுத்திவிட்டு நீயும்
    பிழைத்தனை ஓடிவிடு

கட்டியணைத்துமே காதல் மொழிசொல்லிக்
     கைகளில் இட்டவரே - இனி
விட்டு விலகிட எண்ணியிருப்பது
     விந்தையில் விந்தையன்றோ - அன்று
தொட்டதனாலேஎன் தூயமனதினில்
      தோன்றிய வேதனையை நீவிர்
விட்டு நலங்கொளச் செய்தலன்றி ஒரு
      வேடிக்கை வேண்டியதோ

அந்தர வானிலேகூடுகட்டி அதில்
      ஆனையின்முட்டைவைத்தேன் - ஆகா
விந்தை நாலுகுஞ்சு வந்ததடாஎன்று
       வீணில் பசப்பும்பெண்ணே - இதோ
உந்தன்மொழி பொய்யும் என்னிடம் செல்லாது
        போதும் நிறுத்திவிடு - எழில்
சுந்தரியே சொல்லு சேதிகேட்கும் சபை
       சென்றது எங்கேயிங்கு

சொல்லி முடிக்க முன்வந்தவரோ - ஒரு
   சித்திரக்கேலி யென்னும்
ஒல்லி உருவமும் ஓங்கிய நெற்றியும்
    ஊடேசிலமுடிகள் -வந்து
நல்லது உங்கள் வழக்கென்ன கூறுவீர்!
   நங்கையே சொல்லிடுவாய் -என
வல்லவர் சொல்லியபோது புரிந்தது
   வந்தவர் ஊர்தலைவர்

பகுதி 3 ல் தொடரும்

நீதி கேட்ட தேவதை (பகுதி 3)

3.  பொய்யுரைத்த பேதை

”அன்றொரு நாட்குளிர் நீருள்ளிருக்கையில்
    அல்லிக் குளத்தருகே - இவர்
என்னை கவர்ந்திடும் எண்ணமுடன்வந்து
   ஏழை மனம்புகுந்தார் - முதல்
இன்றுவரை இவர் எந்தன் மனதினில்
   ஏக்கம்தனை விதைத்து -எனைக்
கொன்றுவிடுவதுபோலும் மனதினில்
   கேடுவிளைத்து நின்றார்

சின்னவள் தானிவள் சொல்லும் மொழியுண்மை
   சிந்தை மயக்கியவர் - நிதம்
எந்தன் கனவினில் வந்து புகுந்திரு
      கன்னம் தழுவுகின்றார் -  எனைப்
பொன்னெனப் பேசி பிதற்றுகிறார் எந்தன்
       பின்னலை  நீவுகிறார் - உடன்
முன்னிருந்து முகம் கைபிடித்தேமுழு
      வெண்மதி என்குகிறார்

ஊருக்கும் உண்மைக்கும் நீதிசொல்லும் நல்ல
      உத்தமமானவரே! - சுனை
நீருக்குள் நாளொன்று நிற்கையிலே அன்று
        நெஞ்சில்புகுந் தவரோ - எவர்
யாருக்கும் ஏதும் அறியமுன்னே என்னை
      ஏனோ சிறைபிடித்தார் - இவர்
போருக்குவீரனாம் பெண்மனதை யின்று
      பித்தம்பிடிக்க வைத்தார்

பாலைக் குடிக்க எடுத்துவைத்தால் மனம்
     பாம்பின் விஷம்என்குது - தினம்
காலைவரை கண்ணை மூடினும் மைவிழி
     காணாத் துயில்போனது - இருள்
மாலை வந்தால் மனம் மாறிப் பகையென
       மங்கையெனை வாட்டுது - பெரும்
ஆலை பிழிந்திடும் செங்கரும்பாய் எந்தன்
     மேனி துயர் கொள்ளுது

கண்கள் பனித்தன தொங்கும் இமைகளில்
      கண்ணீர்த்துளி திரண்டு - வெகு
பொன்னெனும் கன்னம்கடந்து அவளது
        பேசுமிதழ் கலக்க -அந்த
சின்ன உதடு கசந்தனவோ, அவள்
      செவ்விதழ் கோணலிட்டாள் - பின்னர்
என்னைகடை விழிகொண்டு நிலைகண்டு
      ஏதோ மீண்டு முரைத்தாள்

பூவிழிமூட முடியவில்லை ஒரு
      பொழுதும் தூக்கமில்லை -எந்தன்
நாவில் தெளிவெழும் பேச்சுஇல்லை ஒரு
      நல்ல உணர்வுஇல்லை --ஆகா
ஆவிதுடிக்குது  ஆனந்தம்பொங்கவே
       கீதம் இசைத்தபடி - மலர்
தூவிமகிழ்ந்திட வேண்டிநின்றேன் இந்த
       துன்பமென் றாகிவிட்டேன்

காற்றாகி வந்து மென்கன்னம் உரசியும்
     கைகளால் நீவுகிறார் - வந்து
ஆற்றில்குளிக்கையில் ஆடுமலைகளாய்
       ஆடையைதள்ளுகிறார் -உள்ள
ஊற்றிலுணர்வினுள் உள்ளக் கிளர்ச்சியில்
      ஓடிப் பெருகுகிறார் -எந்த
வேற்றுமை யின்றியே வேண்டு மொருநீதி
      வேதனைபோயிடவே

கொட்டியதுபல பொன்விளை காசென
        கொல்லெனவே நகைத்து -உடன்
பட்டெனக் கைதட்டிப் புன்னகையில் ஆகா
        பெண்ணே கனவா என்றார் -விரல்
நெட்டி முறித்துவிரல் மடக்கி ஓகோ
          நிற்கும் இளையபெண்ணே - இங்கு
குட்டிகதை சொல்லக் கூட்டிவந்தாய் இது
        குற்றம் எனச்சினந்தான்

கட்டுக்கதையல்ல கன்னிவள் மனம்
  கள்ளம்புகுந்துவிட - இரு
வட்டவிழியழ வேதனை கூடிட
  வேறெவர் காரணமோ - ஆணும்
தொட்டு விடுவதில் மட்டுமல்ல பெண்ணின்
  தூய்மை கலைவதற்கு  - உளம்
கெட்டு அலைந்திட கூர்விழியாலென்னை
    குத்தி  அடிமை செய்தார்

மொட்டைத் தலையதும் மீசையும் கொண்டவர்
 மீண்டும் விழிஉருட்டி - நிலை
தட்டுத்தடுமாறி தன்நிலையில் சற்று
 தத்தளித்து மொழிந்தார் - இரு
வட்டவிழிகளில் நீர்துளிர்த்து வெளி
  வந்தது முத்தெனவே -அவை
பொட்டெனப் போய்நிலம் தொட்டுஅழிந்திட
  பூவைஅழகும் கண்டேன்

”செம்மை உடைத்தோனே சின்னவள் சொல்வது
    சற்றும் என் வாழ்வினிலே - ஒரு
வம்பு வழக்கிதைப் போலும் அறிந்திலேன்
    வாழ்வில் புதுவிதமே - இந்த
வெம்பும்விழி சொரி மங்கையின் பேச்சுமே
     வேடிக்கை யானதுகாண் - இதை
நம்புவதா என நானறியேன் உந்தன்
   நாமொழி கண்டுரைப்பேன்”

செந்தழல்வீசிய சின்னவளின் முகம்
   சோர்ந்து துவளக் கண்டேன் -அதில்
எந்தளவோ ஓரு யெல்லையற்ற சோகம்
    அங்கவள் மூச்சில்கண்டேன் - கண்ட
மந்தமெனும் இளம் புன்னகை யில்பெரு
    மாசறு காதல் கண்டேன் -இவள்
செந்தமிழ் பேசிடும் செல்வியின் கண்களில்
    சேருமோர் சோகங் கண்டேன்

”பொல்லா மனங்கொண்ட பொய்மகளே ஒரு
   போதும் மனம் இளகேன் - ஒரு
வல்லவன் என்னிடம் சொல்லும் பொய்யில்வந்த
   வெஞ்சினம் ஆறலற்றேன் - இங்கு
நல்லதொரு நீதிநான் சொல்லுவே”னென
    நங்கையை நோக்கி நின்றேன் - ஒரு
கல்லில் சிலையென கண்கள் பனித்திட
    கட்டுடல் ஆட நின்றாள்

(அடுத்தில் முடியும்)

நீதி கேட்ட தேவதை (பகுதி 4)

04.தீர்ப்பு

பாட்டினிசை கொண்டே புள்ளினங்கள் பல
   பக்க மரங்களிலே
நீட்டி வளர்கிளை நின்றொலிக்கக் கதிர்
   நீளக்கிடை முகிலுள்
காட்டில் மேலைத்திசை கண்சிவந்தும் வீசு  
   காற்றின் குளிர்த் தழுவல்
கூட்டி மெதுஇன்பம் கொள்ளக் கிடக்கையில்
   கீழே மறைந்து கொண்டான்

மென் நகைக்கும் அந்த மாதவளின்விழி
   மேவியோர் நோட்டமிட்டே      
முன்னம் இருப்பது பெண்ணவளோ ஒரு
   மேகத்தில் தேவதையோ
சின்னதெனச் சிற்பி செய்சிலையோ அன்றி
     சேரும் குவை,பொதியோ
என்ன தறிந்திடா  எண்ணம் குழைந்திட
     ஏந்திழையைக் கண்ணுற்றேன்

நீரில் எழுந்தபூ பங்கயத்தின்  நிலை
    நின்று ஆடியலைந்தாள்
வாரிக் கண்ணீர் கொட்டி நீருள் அழுதிட
     வஞ்சகம் துன்பமதை
யாரின் விழி காணா ஆன கயல்நிலை
       ஆகித்துயர் சொரிந்தாள்
பாரினிடை இந்தப் பைங்கிளியோ ஏதோ
        பாசத்திற்காய் துடித்தாள்

காட்டில் உயர்மர கூடலிலே இரு
   கண்ணும் இழந்தவளாய்
கூட்டிமனதிடை கொண்ட சோகம்பெரும்
   கொள்ளிருள் நேரத்திலே
போட்ட சிறுமணி புல்லிடையிற் தேடல்
  போல எதிரிருந்தாள்
வாட்டமதைக் கண்டேன் வாழ்வினுக்காய் இந்த
  வண்ணம் மனதெடுத்தாள்

மீட்டும் வீணையெனில் ஓங்கிப் புழுதியில்
  மோத எறிந்திடவோ
தேட்டம் மெனப் பொன்னில் வார்த்தசிலையெனில்
  தூளாய் நொருக்கிடவோ
நோட்டம்விட்டேஇதில் நானெதுசெய்வதோ
   நல்லதோர் தீர்வுதனை
தீட்டியொரு திட்டம் தோன்றிவிட அதைத்
   தேவியின் முன்பகர்ந்தேன்

உந்தன் கனவதில் வந்தவன் நானென
  உரைத்தழும் பாவையே
எந்தன்கனவிலும் வந்துவிடு எனக்
   கின்னல் விளைத்துவிடு
சிந்துமுன் புன்னகை பங்கம் இழைத்தவன்
   சிந்தையில் நீ புகுந்து
தந்துவிடு இவன் தந்தபொருள் எவை
    தானும்  முழுதெனக்கு

தொட்டுஇழைத்தவை அத்தனையும் நீயும்
    தொட்டு அளித்துவிடு
பட்டே துன்பமிட இட்ட வதைகளைப்
   பார்த்துத் திருப்பிக்கொடு
கட்டியணைத்திடில்  கட்டியணை நீயும்
    கட்டளை யிட்டுவிடு
கொட்டிகுவித்தஎன் குற்றமெல்லாம்பதில்
    கூட்டிக் கொடுத்துவிடு

உந்தன் மனம்சுட  உள்விளைத்த துயர்
   உள்ள மெடுக்கவிடு
சிந்தனைகொண்டிடத் தீயிட்டு காதலின்
    தீமை உணர்த்திவிடு
சந்தண மேனியில் செய்த குறும்புகள்
  சற்றும் தவறிவிடா
தந்ததைப்போலத்  திருப்பிக் கொடுத்திடு
   தீரும் கணக்கதற்கு

செந்தணல்வீசுமோர் சிற்பமென்றானவள்
    இந்தக் குளிர் நிலவா
சுந்தரத் தென்றலா சோலைக் குயிலிதா
    சுற்றி யெழும் புயலா
சிந்தும் எழில்மலர் சேயிழை கண்களில்
    சேர்வது முத்துக்களா
செந்தூரவாயி னிதழ்கள் துடிப்பதும்
    இன்பக் கலக்கத்திலா

செவ்வரி யோடிய கண்கள் மயங்கிடச்
    சற்று நிமிர்ந்து நின்றாள்
திவ்விய ரூபியச் சுந்தரி பொன்னெழில்
    தேகமெடுத்து நின்றாள்
கொவ்வை இதழ்களில் புன்னகை பூத்திடக்
    கொஞ்ச மருகில் வந்தாள்
எவ்விதம் நின்னுடை எண்ணத்தினுள் வரல்
     ஏழைஅறியே னென்றாள்

சொன்னவை யாவையும் செய்யக் கனவினில்
    சேருவ தேதறியேன்
முன்னிருந்து நேரில் தந்திடுவேன் ஆயின்
    மொத்தமா  யில்லை யென்றாள்
சின்னச் சிறிதெனத் தந்திடலாம் அவை
    சேர்த்துக் கணக்கிடுவேன்
என்ன கொடுப்பதில் வஞ்சனை செய்திடில்
    இட்டு வட்டி எடுப்பேன்

மன்ற நடுவரைக் காணவில்லை அவர்
   மாயமென் றாகிவிட்டார்
தென்றலே போதுமா தீர்ப்பு  திருப்தியா
   தேவையைக் கூறா யென்றேன்
கன்றிளம் மானெனத் துள்ளலுடன் அவள்
   கண்களில் மின்னொளியாய்
நின்று ஈதுகன வில்லை என்றுஎந்தன்
    நெஞ்சில்முகம் புதைத்தாள்

(முடிந்தது.)

உலகை வென்றவன் (1ம் பகுதி)


காரிருள் கூந்தல் கலைந்து புவிமுகக்
காணுமெழில் மறைக்கத் -தலை
வாரியிருள் குழல்பூ முடித்தாள் புவி
வண்ணம் மகள், அதனால் - அவள்
பேரழகோ பெரும் வானத் தெருவினில்
பேர்புகழாய் பரவ - ஒளித்
தேரில் கதிரவன் தேவதையைக் காணத்
திக்குகிழக் கெழுந்தான்

விட்டிருள் போகுமவ் வேளை மலர்களின்
வாசம் எழுந்துவர - முன்னே
சட்டென நின்றுதன் செட்டை அடித்துஓர்
சங்கதி சேவல் சொல்ல - குளிர்
முற்றமதில் சிறுபுல்லின் பனி பாதம்
பட்டுத் பன்னீர் தெளிக்க - ஒரு
கச்சல் சுவைவேம்புக் குச்சி முறித்துப்
பல்லிட்டுக் குறுநடந்தேன்

மெத்தையெனும் மணல் மீதுவீசுதென்றல்
தொட்டு உதிர்த்துவைத்த - சில-
செத்தல் சருகில்கால் வைத்த அடியிடை
சட்டென்று சத்தமிட அயல்
கட்டைவேலி தென்னங் காணியருகிலோர்
வட்டக்குள மிருக்கும் - பக்கம்
தோட்டக் தரையினை நோக்கி நடந்திட்டேன்
சூழ் இருள்போக முன்னே

சற்றுநடந்து நான் வெட்ட வெளிவரச்
சம்பவம் ஒன்று கண்டேன்- நிறை
சுற்றிக் கமுகும்நல் மாதுளைத் தோட்டமும்
சூழ்ந்ததொரு திசையில் சிறு
பற்றி எரிகின்ற தீப்பந்து போலொன்று
பக்கம் எழும்பக் கண்டேன். அதைச்
சுற்றி எவரும்கண் காணவில்லை தனி
யாகத்தீ ஆடக்கண்டேன்

கொள்ளிவால் பேயொன்று கொல்ல வருகுது
ஐயோ என்றே அலறி - அருள்
வள்ளிமுருகனே நல்லூர்வாழ் வேலனே வா
எனைக்காக்க என்றேன் - ஆகா
வள்ளியும் இல்லையோர் கந்தனுமில்லை நீ
வா என்ற வேலனில்லை - அட
எல்லா உலகமும் எம் வசமானது
என்றச ரீரி கேட்டேன்

”யாரது என்று திரும்பி நின்றேன் ஒரு
ஆளோ உருவமில்லை - எவர்
நேரில் வருவது விட்டொரு கோழைநீ
எங்கொழிந்தாய்” எனவோ - உடன்
”நேரில் வருவது எங்கள் குணமல்ல
நேர்மை நீதியறியோம் பெரும்
பாரில் இழைத்திடும் பாதகம் ஒன்றேநாம்
பண்ணும் செயல”தென்றான்

ஏது பெயர் உனக்கென்ன குறை நீ
எண்ணுவதென்ன என்று - என்
காதுமட்டும் கேட்ட தாழ்குரல் நோக்கி நான்
கேள்வியைப் பாயவிட்டேன் - அட
பேய் உலகாளு மிப்பேரரசன் எனை
யாரென்று கேட்டு விட்டாய் உன்
ஆவி எடுத்துந்தன் மெய்கிழித் துக்குடல்
மாலை கொள்வேனடா பார்

என்றகுரல் நோக்கி ஆகா ஏதெண்ணம்நான்
இன்னும் குழந்தையல்ல - நீயும்
எங்கோ மறைந்துநின் றென்பெயர் பேய்என்றால்
நம்பநான் மூடனல்ல - இதை
சொன்னதும் தீயொளி மீண்டும்எழுந்தென்னை
சுட்டதைப் போல்நெருங்கி - அதோ
மண்ணில் விழுந்துமறைய எழுந்தது
மாய உருவமொன்று

கன்னக்கரு முகம், முன்னேவெளி வந்த
கண்களுடன் பெரும் பல்லிரண்டாம்.
என்னபெரிய வயிறதுவோஅதை
ஏது சொல்வேனொரு வார்த்தையில்லை
சொன்னது கேட்டேன் பிசாசுகளின்நல்ல
சுந்தர ரூபப் பெருந்தலைவா
உன்னையடைவதில் என்னபயன் இந்த
ஊருமுலகமும் பெற்றதென்றேன்

உலகை வென்றவன் ---- (2ம் பகுதி)

2 . பேயின் கோபம்

கன்னக்கரு முகம், முன்னேவெளி வந்த
கண்களுடன் பெரும் பல்லிரண்டாம்.
என்னபெரிய வயிறதுவோஅதை
ஏது சொல்வேனொரு வார்த்தையில்லை
சொன்னது கேட்டேன் பிசாசுகளின்நல்ல
சுந்தர ரூபப் பெருந்தலைவா
உன்னையடைவதில் என்னபயன் இந்த
ஊருமுலகமும் பெற்றதென்றேன்

அட்டகாசமென வாய் பிளந்தது உள்ளே
அத்தனை சொத்தைப்பல்லும் தெரிய
கொட்டி குலுங்கிச்சிரித்திட்ட போதினில்
கோரமெனக்கண்டு அச்சமுற்றேன்
வெட்டி இடிமின்னல்தானிடிக்க மேளம்
தட்டுவதுபோலத் தான் நகைத்து
பட்டிதொட்டியெங்கும் என்புகழேஇவன்
பண்ணியதா இதோ பாராய் என்றான்.

சின்னவனே இந்த மண்ணின் உரிமையை
தேவர்கள் போரினில் வென்றுவிட்டோம்
அன்னியனே இனி என்னையல்லால் இங்கு
யாரும் உனக்கென இல்லையடா
என்னை வணங்கிடு என்புகழ் பாடிடு
உன்னைஉயரத்தில் தூக்கி வைப்பேன்-
நன்மை நீதியென்று பேச்சுரைத்தால் உடன்
நாராக்கி உன்னுடல் பிய்த்தெறிவேன்

நீதி அழிந்தது பாருலகில்  எங்கும்
நீசம் மலிந்தது எம் செயலால்
ஆதித்தமிழ்க்குலத் தொன்மையென்றாய் அதில்
ஆயிரங்கள் லட்சம் கொன்றுவிட்டேன்
மீதியினர் என்னை யாசிப்பவர் இன்றேல்
பூமியை விட்டு அனுப்பிடுவேன்
பாதி உலகத்து தேசமெல்லாம் எங்கள்
பக்கமிணைந்தவர் ஆளுதல் காண்

ஓதியதை இவர்காதிற்கொண்டு இந்த
உண்மை நெறிகளை விட்டிருந்தார்
காதில் உரைப்பதைக்கேட்டிடுவாய் இந்தக்
காலமெனது கடவுளல்ல
போதில் வதை வலி பேய்க்குணமும் பல
புன்மைஇழைத்திடும் நற்திறன்கொள்
ஏதிதில் தப்பிப்பிழைத்திடுவாய் இதில்
இல்லைதர்மம் என்றும் ஆனந்திப்பேன்

ஏனோ உன்பேச்சுப் புரியவில்லை நல்ல
இம்சை புகழ்பேயே சொலவதென்ன
ஆனதென இந்தப் பூமியில் தேசங்கள்
ஆக்கிய தர்மங்கள் சட்டமெங்கே
மேனி சிவந்திட கண்ணுருட்டி என்னை
மீட்டும் கோணல்வாயில் பல்நெரித்து
ஊனை உடலுயிர் வேண்டுமென்றால் விட்டு
ஓடி வந்து பக்கம் சேர்ந்திடென்றான்


மானமது கொண்டேன் மக்களுடன் நானும்
மானிடரோடு நல்மானிடனாய்
தான தருமங்கள் புண்ணியத்தில் உயிர்
தங்கிக் கிடந்திட வாழுகிறேன்
போனது போகட்டும் சென்றிடுவாய் - இந்த
பாரை வாழவிடு என்றுரைத்தேன்
வானமதிர்ந்திட்ட பேய்சிரிப்புஒன்றில்
வார்த்தை இறுக்கிடச் சூழுரைத்தான்

தேனமுதை உண்ணத் தேவையில்லையென
தேடிவந்த என்னை நீ பகைத்தாய் !
வானமது உந்தன் மாளிகையாம் அந்த
விண்ணெழிற் தாரகை மின் விளக்காம்
காணுமிப் பூமியில் கால்நடக்கும் வித்தை
கொள்ள உன்மேனி மறந்துவிடு !
ஊனமது மண்ணுக் கென்றவனோ - உடன்
என்னுயிர் கொன்றிடச் சித்தம் கொண்டான்

என்னை இவன்கொல்லல் நிச்சயமேயென்று
இன்னுயிரில் பெரும் ஆசைகொண்டேன்!
அன்னை பராசக்தி ஆணையிடு இவன்
அன்புடையோன் உன்னில் காத்திடென்றேன்
நான் திகைக்க அந்த நானிலம் கொண்டவன்
நாடி உயிர்கொள்ள ஓடிவந்தான்
போனதுவாம் உயிரென்ன தொலையெழும்
பாடலொன்று கேட்டு நின்றுவிட்டான்

3. எங்கிருந்தோ கேட்ட பாடல்

நில்லாடா பாதக நீநிறுத்து இல்லை
நேருமடா விதி தான்உனக்கு
வல்லமை கொண்டது வானிருக்கு எமை
வாழப் படைத்திட்ட ஓர்நெருபு
தொல்லையடா இங்கு உன்பிறப்பு இனித்
தோன்றிடுமாம் விதியின் கணக்கு
எல்லையிட்டு வரும் புன்மையிற்கு இங்கு
ஏறுமடா கதிர் வாழ்வொளிக்கு

புல்லையடா என்றும் தன்பசிக்கு அந்தப்
பொல்லா விலங்கென்றும் உண்டதுண்டோ
வெல்லா தென்பதொரு கல்லெழுத்து அல்ல!
வெள்ளநீர்மேல் எழுதும்கணக்கு.
சொல்லால் சொல்லி வைத்தபொய்யுரைகள் எலாம்
 சுட்டெரிக்குமொரு சூரியத்தீ
நில்லா வானமேறி உச்சிவரும் எங்கள்
நிர்க்கதி போயொரு வாழ்வுவரும்

(இன்னுமுண்டு)

உலகை வென்றவன் (பகுதி 3)

உலகை வென்றவன் 3

பாடலொலித்த திசை தனிலேகொள்ளிப்
பாளம் போலுமிரு கண்வெறித்து
கூடமுறுகித் திரிந்த உதடுகள்
கோணிக் கடித்திடக் கோபம்கொண்டான்
ஆடல் முடித்தவ னானந்தமாகத் தன்
ஆவி விடுத்திடச் செய்குவன்பார்
நாடும் மனையும்நற் பெண்டிரும் வேண்டிய
நல்லவன் பூமியில் இல்லைநீபார்

என்று சினந்தனன் எத்தன்பிசாசுகட்
கேற்ற தலைவன் முன் வானெழுந்து
நன்றுஎனை மறந் தங்கோர் திசைதனை
நாடிப்பறந்து மறைந்துசென்றான்
கொன்றனனோ விட்டுசென்றனனோ- அங்கு
கூடியதேதென நானறியேன்
தென்ற லலைத்திட துள்ளுமலைகொண்ட
தண்குளம் நோக்கி நடைபயின்றேன்

பொங்கி வழிந்திடும் நீர்நிறைந்த
சிறுபொய்கையில் தாமரை பூத்துநிற்க
திங்கள் முகமெனும் தேன்மலரில் துள்ளும்
சேயிழையார் விழிபோல் கயலும்
நங்கை மலர்கரம் போல்நளினம் கொண்டே
நாட்டிய மாடிடும் வெண்ணலையும்
தங்கும்குளத்திடை தண்மை உடல்பட
தாங்கி  நடந்தேன் தனிமையிலே

பங்கயம்போலும் பனிமுகத்தை நீரில்
பாவை யொருத்தியும் பார்த்தகதை
எங்கோபடித்தது எண்ணம் எடுத்திட
என்முக மெப்படி என்றுகண்டேன்
தெங்கின் பழத்தைஒர் தேரிடைவைத்து
நெரித்ததுபோல் முகம் வாய்த்திருக்க
அங்குஇருவிழி ஆந்தமுழியென
ஆடுவது கண்டு புன்னகைத்தேன்

சிந்தை கொண்டசினம் சென்றுகரைந்திட
சேர்த்தே இருகரம் மொண்டுநீரை
எந்தன்முகமிடை ஏந்திநனைத்திட
எண்ண அவன்உரு வந்ததடா
விந்தை அந்நீரினில் பிம்பம்தெரிந்திட
விண்ணில் அவன்முகம் உள்ளதென்று
முந்திவிழுந்து முகம் திருப்ப அந்த
மோசப் பிசாசினைக் கண்டுநின்றேன்

உந்தனைக்கொல்ல மறந்திடுவேனோ
உத்தமனே எந்தன் சத்துருவே
சந்தமின்றி இசைதானுமின்றி வரும்
சுந்தர நாட்டியம் போல்குதித்தான்
செந்தழல் வீசிட அந்தரவானிலே
மந்திரமா யவன் ஆடிநின்று
என்தலை கொய்திட ஏகுகையில் எங்கோ
இன்னொருகீதம் ஒலித்தடா

மீண்டும் கேட்ட பாடல்

காற்றுவானில் ஓடி ஓடிக் கண்டதே சுதந்திரம்
ஊற்றும் மேகம் ஓடும்வானில் உள்ளதே சுதந்திரம்
ஏற்றமுற்ற ஆற்றுநீரும் ஓடும் கீழ் சுதந்திரம்
இற்றை நாளில் ஏழைகொள்ள இல்லையே சுதந்திரம்

ஆற்றில் நீந்தும் மீன்கள் துள்ளும் ஆனந்தம் சுதந்திரம்
காற்றின் போக்கில் சுற்றும்பட்டம் காண்பதும் சுதந்திரம்
ஊற்றும் மேகநீர் கலக்கும் ஒங்கும் சாகரத்தலை
ஏற்றங் கண்டு வீழ்ந்தும் ஓடி இன்பங்கொள் சுதந்திரம்

காட்டில் பூத்த தேன்மலர்கொள் கள்ளையுண்ட வண்டதும்
தோட்ட மா மரத்தில் தொங்கும் தேன்பழத்தை தின்றதும்
கூட்டி வான்பறக்கும் சின்னக் குருவி காண் சுதந்திரம்
நாட்டில் வாழும் நம்மவர்க்கு நல்கவில்லை ஏனின்னும்

பாட்டி சொன்ன பைந்தமிழ்க்கு  பாடிஆடும் நாட்டியம்
காட்டி அன்புக் கோட்டையென்று காவல்கொண்ட சொந்தமும்
தேட்டமிட்டுச் சேர்த்தபொன்னும் சொத்தும் கொள்ளை போய்விட
வீட்டின் பின்புறத்தில் ஓடிவீழ்வதோ சுதந்திரம்

தோட்ட மீது நீரிறைத்து துள்ளியோடிக் கத்தரி
நீட்டு வாழையோடு வெண்டி நீத்து பூசணிக்கென
பாட்டுபாடி காவல்காத்துப் பட்சியோட்டி வானிலே
கேட்டொலிக்க அச்சமின்றிக் காணுதல் சுதந்திரம்

சூட்டில் தேகம் விட்டொழிந்து சோர்வதோ சுதந்திரம்
பூட்டிவைத்து போட்டடிக்க ஆவதோ சுதந்திரம்
வாட்டிபெண்கள் வாய்கிழிக்க வாழ்வதோ சுதந்திரம்
ஓட்டியெம்மை பூமி மேய்க்க உள்ளதோ சுதந்திரம்

(அடுத்ததி ல் முடியும்)

உலகை வென்றவன் ( 4ம் பகுதி)

உலகை வென்றவன் 4

 . விடியாமல் விடிந்தது

பாடல் வந்த திசையினிலே
படபட வென்றோர் ஒலிகேட்கக்
கூடல் ஒன்று சேர்வதுவாய்க்
குழுமும் மாந்தரொலி யெழவும்
தேடல்ஒன்று தொடங்கியதாய்
திக்கில் ஓசை தானுணர்ந்து
ஆடல்கண்டான் இம்சை யதன்
அருமைத் தலைவன் அழகனிவன்

அன்பே கொண்டு அகிலமதை
ஆளும் தெய்வம் நின்றுகொல்லும்
வன்மை தீது வக்கிரங்கள்
வாழும் சிலநாள்,  வலியின்றித்
தென்பும்கெட்டு தொலையும் நாள்
தூரமின்றிக் சேர்ந்துவிடும்
என்றோருண்மை கொண்டவராய்
இணையும் மக்கள் ஒலிகேட்கக்

கன்னம் சிவந்து அச்சமுடன்
காணுபேயின் தன்மையிலும்
இன்னும் பெரிதாய் சிவந்திட்ட
இளமை கொண்ட கீழ்வானம்
தன்னில் செம்மைத் தினகரனும்
தரையில் ஆட்சிகொள்ள வெனும்
உன்னத வரவை வரவேற்கும்
ஒளியும் மெல்லஎழும்வேளை

தேகம் நடுங்கிப் போய்விடினும்
தன்மை வெளியே காட்டாது
நாகம் கொண்ட நஞ்சதனில்
நலிவும் புன்மை கொண்டவனோ
பாகம் மேனி முழுதாகப்
பரவக் கொண்ட பேயரசன்
ஆகும்நிலையை புரிந்ததனால்
அகம்கொள் சினத்தில் அளவற்றான்

  (வேறு)

ஏரென நீட்டிய பல்லுடனே அந்த
இன்ன லிழைத்தவனும்
போரடா கொண்டிடப் பாடுபட்டேன் இது
போலும் எழுச்சியல்ல
பாரடா உன்னுடை மேனி அனல்கொண்டு
பற்றிடத் தீயிடுவேன்
சேரடா வானம் இப்பூவுலகில் வாழச்
சேர்ந்தவ னில்லையடா

நீதியுடன் தர்மம்  நிம்மதி ஒற்றுமைக்
கிவ்வுல கில்லையடா
பெண் கெடுத்துச் சிறுபிள்ளை கொன்றும் பலர்
சொத்தை களவெடுத்தோன்
பொய்சொல்லி உற்றவர் வாழ்வு கெடுத்துமிப்
பூமியைப் பாழ்படுத்தும்
தீயமனம் கொண்ட மானிடனே இத்
தீவினில் வாழ்ந்திடலாம்

நன்மை நீதியென்று பேசமுன்னர் அவன்
நாக்கை அறுத்துவிட்டு
கண்கள் பிடுங்கி ஓர் நெஞ்சம் கிழித்துப்பின்
கழுத்தில் தூக்கிடுவேன்
நல்லவனை இங்கு விட்டு வைத்தால்
இந்த நாடு திருந்திவிடும்
கொல்லுகிறேன் இதோ பாரென்று கூவியும்
கொல்லஓர் வாளெடுத்தான்

சொல்ல முடியாத வேதனையும் சினம்
பொங்கி எழுந்து வர
துள்ளி எழுந்து உதை கொடுத்தேன் ஏது
கண்டது பேய்க்கனவா
பெண்குரல் கேட்டு விழி திறந்தேன் முன்னே
நின்றவள் என்துணைவி
பொல்லாக் கனவது என்றேன் அவளொரு
புன்னகை தானுதிர்த்தாள்

(முடிந்தது)