காதல் பிசாசு 1
(இது ஒரு திகில்கவிதை. பயங்கரம் நிறைந்த கவிதை உருவாக்கும் ஆசையில் எழுந்தது)
1. பெண்ணென்று எண்ணி ..!
வெயிலடித்தே உடல்நொந்த வேதனையில் புவியாள்
இருளெடுத்து மேனியதன் எழில் மறைத்துத் தூங்க
முகில்விடுத்து மோகங்கொள் முழுமதியன் புவியின்
மூடியதோர் துகில்விலக்கி மேனியெழில்காண
கிளுகிளுத்து மெளச் சிரித்து கீழ்விழுந்தே ஓடும்
குளிரெடுத்த நதியொருத்தி கொண்டஒருகாட்டில்
சிலுசிலுத்து மரங்கள்பல சேர்ந்து சிரித்தாடும்
சிறியதொரு வழியிடையே சென்றிருந்தேன் யானும்
தரு செறிந்த காட்டினிடை தவறிடும் வெண்நிலவில்
தான் எடுத்த சிறுவிளக்கை தாங்கிய மின்மினிகள்
அருகெழுந்து பறந்தவகை அழகுணர்வை ஊட்ட
அதிசயமவ் விரவினிலே அவள் குரலைக் கேட்டேன்
காற்றினில் கலந்துவந்த கீதமிசை பாடும்
கானகத்துப் பூங்குயில்யார் காணமனம் எண்ணி
மேற்றிசையில் காலெடுத்து மெல்லநடை கொள்ள
மேனிசிலிர்த் தேன்காட்சி மீதமெதைச் சொல்வேன்
சின்னதொரு மண்குடிசை முன்னர் சிலையாக
செழுமை யுடன் வாலிபத்து தேவதையோ நின்றாள்
விண்ணெழுந்த தீயெரிய. வெம்மை குளிர்காய்ந்தே
விழிநனைந்த அழகியவள். விரகஇசை கேட்டேன்
(அவள் பாடுகிறாள்)
உன்னையே எண்ணி உருகிநின்றேன் அன்பே
என்னைக் கலந்திடநீ என்று வருவாயோ
கன்னம்பிடித்தழகு காணஉந்தன் கையிருக்க
கட்டழகை வெட்டவெளிக் காற்றே தழுவுதய்யா
மேனிஅனல் பிடித்து மெல்லச் சருகானதையோ
கூனிக்கிழமெடுத்து கொள்ளமுதல் வந்திடாயோ
ஆன இளமையிவள் அழகு செழித் தானதெலாம்
தானே கருகும்வரை தவிக்கஎனை விட்டதுமேன்
பூவிதழில் வண்டுறங்கும் பொய்கையிலே மீனுறங்கும்
பாவோடு இசையுறங்கும் பனிபுல்லின் மேலுறங்கும்
பாவை இவள்உறங்கிப் பன்னெடுநாள் ஆச்சுதய்யோ
சாவில் உறங்கவெனத் தள்ளிவைத்து நின்றனையோ
கூவி அழைத்துத்தினம் குயிலாகப் பாடுகின்றேன்
மேவி எனை மயக்கி மேனிசுகம் தருவதெப்போ
தாவி உடல் வருத்தி தேகம் முறுக்கி வலி
ஆவி எடுக்கமுதல் அள்ளிச் சுகம் தாருமய்யா
உள்ளம்துடிக்குதையோ உத்தமனே எங்கிருந்தாய்
உள்ளே மனதுகல்லோ ஓடி உயிர் போகுதய்யோ
வெள்ளம் போலன்புவர வேகிடுமிக் கன்னியிவள்
வீழ்ந்து குளிப்பதனால் வேதனையும் போகாதோ
கல்லும் மனமிரங்கும் காதலனே நீஇரங்காய்
சொல்லும் இவள் முடிவை சற்று இனிக்கேளாயோ
கொல்லும் நெருப்பி லெந்தன் கோலம் அழித்திடுவேன்
இல்லையொரு மேனியெனில் இந்தவதை போகுமன்றோ
***
முன்னே இருந்தபெரு மூள் நெருப்பில் சாகவென
கன்னி நடக்கையிலே கண்டுமனம் தான் துடித்து
பெண்ணே நிறுத்து வெறும் பித்தெனவே பேசுகிறாய்
உன்னை அழித்துவிடில் உள்ளபயனேது சொலாய்
பொன்னாய் உனதுடலை பூவுலகில் செய்தவனோ
மண்ணாய் மடிவதற்கோ மாசறுபொன் மேனிவைத்தான்
மின்னல் ஒளியழகும் மேனியெனும் நல்லுருவும்
என்னே அழகு இது இவ்வுலக சொர்க்கமன்றோ
உந்தன் விரகம்உடல் கொண்டதுயர் வேதனையும்
கண்டேன் மனங்கலங்கி கண்கள் குளமாதல் தவிர்
எங்கோ ஒருவன் உனக் கிவ்வுலகில் என்றிருப்பான்
மங்கை உனையடைவான் மனம்மாறி திரும்பென்றேன்
கண்ணில் வியப்பினொளி காட்டியெனைப் பார்த்தவளோ
காதல் கனிந்ததடி காலமுனைக் காத்ததடி
மண்ணில் எனையடைய .மாயவரே வந்துவிட்டார்
மாதென் துயரங்கள் மாறி உயிர் கொள்வனடி
வெள்ளிச் சலங்கையொலி வீசுங்குளிர் காற்றிலெழ
துள்ளிச் சிரித்தபடி சொல்லிக் கணம் மறைந்தாள்
அள்ளித் தெளித்தமதி அழகுசொரி பால்நிலவின்
கொள்ளி எரிந்தழியும் குறைஅழலின் சூழ்நிலையில்
வா என்றழைத்தாளா வண்ணமிகு மாதிவளோ
போகின்ற போதெறிந்த புன்னகைக்கு என்னபொருள்
ஏதோ மனங்குழம்பி என்மனது சொல்லமுதல்
தானேயென் கால்நடந்து தாமரைபின் சென்றதாடா!
(தொடர் 2 காண்க)
No comments:
Post a Comment