காதல் பிசாசு 2
2 காதல் மயக்கம்
சென்றதிசை பார்த்தேன் செறிந்த இருள் முன்னாலே
தென்ற லசைந்தணைக்க தேகம் சிலிர்த்துறைய
நின்றெரிந்த பெருநெருப்பில் நிழல்பேயாய் முன்னாட
கொன்றை மரமொன்று கருந்தலையை அசைத்திருக்க
அச்சம் மனமெழுந்து அடிமனதும் இருதயமும்
உச்சிஉறைந்ததென உயிரைப் பிடித்துலுப்ப
பச்சை இலைக் காட்டின் படர்மணமும் சில்வண்டு
’கிச்’சென்று கத்திஒலி கொள்ளும் ஒலிகேட்டு
முன்னே தெரிந்ததொரு மூங்கில் குடிசைதனுள்
கன்னி மறைவதினைக் கண்டுமன ஆவலுடன்
தன்னந் தனி நடந்தேன் தங்கமென நிலவெறிக்க
பின்னும்கால் தயங்கி பிணைய மனம் முன்னிழுக்க
சின்னக் குடிசையுள்ளே சென்றேன் கருமையிருள்
தன்னில் அகல்விளக்கின் தாளும் சுடர் துடிக்க
எண்ணெய் நிரப்பிஅதன் இருந்தஒளி கூட்டியவள்
என்னை வாஎனவே இருகண்ணால் வரவேற்றாள்
வானின் நிலவுதனை வாயில்கரும் பாம்புஒன்று
தானே விழுங்க வந்த தாகக்கரும் கூந்தலெழில்
திங்கள் முகம்நடுவே திரளும்கரு முடிசுருள
சங்குக் கழுத்துடையாள் சந்தணமாய் வாசமிட்டாள்
குரலோ தேம்பாகு குறும்பவள இதழ்நடுவே
விருந்தோ எனஏங்கும் வெள்ளரிசிப் பல்வரிசை
குழம்போ அமுதமென கொள்ளுமெழில் வாயமுது
செழும்பாவை எனைப்பார்த்துச் சிரித்தவிதமோ கரும்பு
இருந்தாள் மதுக்குடமாய் ஈர்கன்னம் மாங்கனிகள்
விருந்தோ தரவென்று விரிமஞ்சம் பஞ்சணைகள்
கரங்கள் மலர்க்கொடியாய் காமன்வில் பூங்கணையாய்
சுரங்கள் மீட்டஇசை சொல்லவென அவளிருந்தாள்
கொட்டியது காசுஎனக் கொல்லென்று நகைசெய்து
தட்டில் பழமெடுத்து தங்கநிறச் செம்பினில்பால்
விட்டுக் கையேந்தி வீழ்ந்திடாதோர் அன்னநடை
கெட்டதுபோ வென்றழகு கொண்டே நடைபயின்றாள்
(மிகுதி 3 ல் தொடரும்)
No comments:
Post a Comment