Monday, 2 December 2013

காதல் பிசாசு (5ம் பகுதி)


காதல் பிசாசு 5

நெஞ்சம்விறைத்துயிரும் நீங்கிவிட கேட்கஎனை
பஞ்சாய் விழிமுன்னே பரவியதென் மதிமயங்க
கொஞ்சம்பொறு என்று குற்றுயிரை நான்நிறுத்திக்
கெஞ்சிக் கதறித்தான் கேட்காயோ கடவுளென

இருகை கூப்பி மன தெண்ணி உளமுருகிக்
கருமுகிலென் றுருவாய் கனத்த வடிவெடுத்த
பெருஇருளிப் பிடிதன்னில் பிணமாகிப் போகாமல்
முருகழகா காப்பாய் என் மூச்சை நிறுத்தாதே

வொருதர மென்பிழையை உள்ளத்தில் கொள்ளாது
கருகும் உடல் எழுந்தே காணிமிப்பேய் கரத்தில்
செருகி என்உடல்பிய்த்துத் தின்றுவிட விதிஉளதோ
உருகி வரம்கேட்டேன் உடன் என்னைக் காவாயோ

அழுத விழி நீர் திரண் டாறாய் பெருக மனம்
தொழுதும் விதியிதுவோ துடித்தேன் என்காலசைய
விழுவது போலிருக்க வீற்றிருந்த இடம்பார்த்தேன்
நழுவும் மரத் துண்டம் நானிருந்த சிதைஎரிய

இறுமாப்புக் கொண்டே இருந்த இடம் என்னுடலை
குறுந்தீ வைத்தே கொளுத்தவென இருந்திடவே
மறுகி மனதஞ்சி மங்கையவள் முன்னிருக்க
விறுவிறென எழுந்தேன் விரைந்தோட முடிந்ததடா

ஆங்காங் குடல் எரிந்த அழகுச் சிதைகளெலாம்
ஓங்கியெழும் புகைகுறைய ஒளிசிறுத்து மினுமினுங்க
பாங்காய் குடல்புரட்டும் பச்சைமணம் எழுந்தேயென்
தீங்காய் உடல்வேர்த்துத் தேகமதை நடுங்கவைக்க

பேயும் துரத்திவந்தால் பேசாமலோடு ஒரு
போதும் தலைதிருப்பி பேயதனைப் பாராதே
தாயும் சிறுவயதில் தந்தஒரு அறிவுரையில்
நாயும் குரைக்க ஒருநடந்துவரும் ஒலிகேட்டும்

ஒய்ந்தே கால் வலித்தும் ஓடும்செயல் நிறுத்தாமல்
பாய்ந்தே ஓடுகின்றேன் பாதைவழி புரியவில்லை
காயும் நிலவுஒரு கருமுகிலில் பயந்தொழிய
கூவும் கோட்டானும் கூடி ஒரு சத்தமிட்டு

ஆடும்பேய்கள் சில அருகில் வரக்காணுவதாய்
கூடும் பலநினவுகளும் குருடாக்கி எனைநெருக்க
பாடும் பட்டதுயர் பாட்டிலிதைக் கூறவொரு
தேடும் வார்த்தைகளோ தீந்தமிழில் நானறியேன்

பட்டடென்றோர் கல்தடக்கப் பாதையதில் தடுமாறி
விட்டே தடாலென்று வீழ்ந்தேனே அய்யகோ!
தொட்டே மண்ணழைந்து தேகம்வலி எடுக்க
விட்டு விடுமென்னிதயம் விரைந்து துடித்திருக்க

விழுந்த இடமிருந்து வேறேதும் தோன்றாமல்
எழுந்து தலைதிருப்பி இருள்தேக மோகினியை
கழுத்தைத் திருப்பி அவள் கண்காண ஐயகோ
சுழுக்கி விழிசெருகித் தலை சுற்ற நின்றேன்

தலையைக் கழற்றியவள் தன்கரத்தில் வைத்தபடி
குலையும் நடுங்க எனைக் குனிந்து தொடவந்தாள்
மலையைப் பிரட்டும் ஒரு மதம்பிடித்த அசரீரி
நிலையும் இது ஏனடா நிமிரெனவோர் குரல்கேட்க

துள்ளி எழுந்தேன் துணிவொன்று உடல்பரவி
வெள்ளி பிழம்பொன்று வெடித்துச் சிதறியாய்
உள்ளத்திடையே ஒர் உணர்வெழவே சிலிர்த்தபடி
கள்ளக் கரும்பேயைக் கைகாட்டி நிறுத்துவதாய்

ஏய்பேயே நில்லங்கே என்னைநீ தீண்டாதே
மாய உருவெடுத்து மயக்கியது சரிதானோ ?
பாவம் எனநினத்துப் பக்கமதில் வந்தவனைப்
பேயாய்மாறி என் பிணம்தின்னக் கூடினையோ ?

ஏதோ மனதிரங்கி இருளடைந்த காட்டினிலே
தீதே அறியாமல் தேடிஒரு துணை இன்றி
ஊதி எரிநெருப்பில் உடல் கருக்கச் சென்றவளை
பாது காத்திவளின் பனிமலர்ப் பூங்கரம்பிடித்து

வாழ்வு கொடுத்திட நான் விரும்பி அருகில்வர
நாளும் அருகிருத்தி நலம்செய்வோமென நினைக்க
பாழும் பிசாசுஎனைப் பசிக்குண்ண வந்தனையோ
தேளும் கொடும்பாம்பில் தீயவளே நில்என்றேன்

(இன்னும் ஒரு பகுதியில் முடியும்)

No comments:

Post a Comment